Friday, July 27, 2012

கலைமொழி புதிர் 1 - பவர் ஸ்டார் ஸ்பெஷல்

இந்த விளையாட்டை எப்படி ஆடுவது என அறிய  இந்தப்  பதிவை பாருங்கள் http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். நன்றி யோசிப்பவர்




Monday, December 12, 2011

இப்படி ஒரு மத்திய அரசு தேவையா?


    முல்லை பெரியாறு பிரச்சனை தமிழகத்திலும் கேரளத்திலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, ஆனால் இப்பிரச்சனையில் தலையிட்டு நடுநிலை செய்துவைக்கவேண்டிய மத்திய அரசோ, இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனை போல ஒன்றுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே தலையிடுகிறது, ஆனால் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதே இல்லை. இந்த பிரச்சனையை மாநிலங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றால் மத்திய அரசாங்கம் எதற்கு நமக்கு?

Tuesday, May 31, 2011

எண்டோசல்ஃபான் எனும் எம தூதன் !


'கல்யாணத்துக்கு வரச் சொன்னா...
கருமாதிக்கு வந்து சேர்ந்திருக்கான் பாரு’ என கிராமத்தில் சொல்வார்கள். இந்தச் சொலவடை அரசு இயந்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டணிக்கு, காலகாலமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்திக் கொண்டிருப்பதுதான் மக்களின் சாபக்கேடு!
''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்
போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.
அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?


ஆளையே காவு வாங்கிவிடும்!
'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.
இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.
பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.


அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா?
பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.
கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,

 
''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!


நாசமாகும் நரம்பு மண்டலம்!
தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.
இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.
எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.


உண்ணாவிரதம் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு!
'இந்தியா முழுவதும் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும்'' என்று ஏற்கெனவே வலியுறுத்தி வரும் கேரள முதல்வர் அச்சுதானந்தன், சமீபத்தில் அதிரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார... எண்டோசல்ஃபானுக்கு எதிரானப் போராட்டம்... அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. எலியும், பூனையுமாக இருந்த பாரதிய ஜனதா உட்பட அரசியல் கட்சிகளும், நடிகர்களும்கூட அக்கறையோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
''காசர்கோடு மாவட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டது போதாதா? அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால்தான் தடை செய்வோம் என மத்திய அரசு சொல்வது முறையா? விவசாயத் துறை மந்திரி சரத் பவார் மக்களைப் பற்றி சிந்திக்காமல், எண்டோசல்ஃபான் கம்பெனிக்கு வக்காலத்து வாங்குகிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றவாளி எனத் தெரிந்திருந்தும், ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய அரசுதானே இது... வேறு எப்படி இருக்கும்?'' என்று உண்ணாவிரதத்தில் குரல் எழுப்பிய அச்சுதானந்தன்,
''எண்டோசல்ஃபானுக்கு, தடைவிதிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்போகிறேன்' என்றும் தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.
அச்சுதானந்தன் உண்ணாவிரதமிருந்த அதேநாளில், கேரள சர்வக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இந்திய அளவில் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது அதில், 'எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இது பற்றிய அறிக்கை கேட்டிருக்கிறோம். இந்த அறிக்கை கிடைத்ததும், இறுதி முடிவு அறிவிக்கப்படும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உண்ணாவிரதம் மாநிலம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளத் தொலைக்காட்சிகளில் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், பாதிப்பு காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஓரணியில் திரட்டியப் பெருமை எண்டோசல்ஃபானுக்கு கிடைத்துள்ளது.

எண்டோசல்ஃபானும்... காசர்கோடும்!
 கேரள மாநிலத்தின், காசர்கோடு பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட, அந்தப் பகுதியே நோயாளிகளின் பூமியாகிவிட்டது. உடல் ஊனமுற்றவர்களாக, புற்றுநோயாளிகளாக, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களாக மொத்தத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள் மக்கள். அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, மக்கள் போராட ஆரம்பித்த பிறகு, விபரீதத்தை உணர்ந்த மாநில அரசு, உடனடியாக எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்தது . காசர்கோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளிலும் எண்டோசல்ஃபானின் பாதிப்பு எதிரொலிக்க, கர்நாடக மாநிலமும் தடை விதித்துள்ளது.

கோடிகளில் நடக்கும் வியாபாரம்!
 உலக அளவில் எண்டோசல்ஃபான் தயாரிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிலில் 3,800 முதல் 4,100 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் இத்துறையில் கால் பதித்திருந்தாலும், 'எக்செல் இன்டஸ்ட்டிரீஸ்', 'ஹிந்துஸ்தான் இன்செக்டிசைஸ்', ஈ.ஜ.டி. பாரி ஆகியவையே அதிகளவில் தயாரிக்கின்றன.

விதவிதமானப் பெயர்கள்!
 'எண்டோசல்ஃபான்’, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி. பழுப்பு மற்றும் கிரீம் நிறங்களில் சிறியத் தூளாகவும், படிகமாகவும் டர்பன்டைன் வாசத்துடனும் இருக்கும். குளோரின் ஏற்றப்பட்ட ஹைட்ரோ-கார்பன்தான் எண்டோசல்ஃபான் என அழைக்கப்படுகிறது. இதில் குளோரின் ஏற்றம் செய்யக் காரணியாக பயன்படுவது... தயோனில் குளோரைடு. இது, கந்தகத்தை பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளதால் நச்சுத் தன்மையுடையதாக இருக்கிறது.
எண்டோசைட் (Endosite), தியோடன் (Thiodan), ஹில்டன் (Hildan), எண்டோசெல் (Endocel),, எண்டாசிட் (Entacid), எண்டோசிட் (Endocid), ஹைசல்பான் (Hysulphan),, பாரிசல்ஃபான் (parrysulfan) ஆகிய பெயர்களில் எண்டோசல்ஃபான் சந்தைப்படுத்தப்படுகிறது.இது, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கும் பூச்சிக்கொல்லி வகையைச் சேர்ந்ததாகும்.
தானியங்கள், காபி, பருத்தி, பழப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களில் நோய் உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கவும், மரத் துண்டுகளைப் பூச்சிகள் அரித்திடாமல் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றம் கேள்வி!
மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு 'எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், 'எண்டோசல்ஃபானைத் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கெஞ்சிய இந்தியா... மிஞ்சிய உலக நாடுகள்!
'உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயற்கை (ரசாயன) மாசு ஒழிப்பு' பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள ரசாயனப் பாதிப்புகளைப் பற்றி விவாதிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மாநாடு ஏப்ரல் 25 முதல் 29 தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் இருந்து, பார்வையாளராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, ''மக்கள் நலனில் அக்கறையுள்ள பல நாடுகள் ஏற்கெனவே எண்டோசல்ஃபானைத் தடைசெய்து விட்டன. தற்போது நடைபெற்ற மாநாட்டில்கூட ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், தங்கள் பகுதிகளில் தடை விதிக்கத் தயார் என அறிவித்தன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 'நாங்கள் ஏற்கெனவே தடை விதித்துவிட்டோம். என்றாலும், காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த மருந்தின் வீரியம், அது பயன்படுத்தப்படாத நாடுகளிலும்கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உலகம் முழுவதும் தடை செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்' என வலியுறுத்தினர்.
பெரும்பாலான நாடுகளின் கருத்தும் இதுதான். இதை முன்கூட்டியே கணித்துவிட்ட இந்திய அரசின் பிரதிநிதிகள், 'ஓட்டெடுப்பு மூலமாக தடை ஏற்படுத்தி விடுவார்களோ' என அஞ்சி... ஆசிய மற்றும் பசிபிக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினர். 'எண்டோசல்ஃபான் உடனடியாக தடை செய்யப்பட்டால், பல விவசாயிகள் நஷ்டமடைவார்கள். இதனால் சமூக, பொருளாதாரத் தாக்கம் ஏற்படும். அதனால் தடைக் காலத்தை 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தள்ளிப்போடலாம்' என அதில் கெஞ்சிக் கூத்தாடியிருந்தனர். இதற்கெல்லாம் காரணம்... மக்கள் மீதான அபிமானமல்ல. பூச்சிக்கொல்லி தயாரிக்கும் கம்பெனிகள் மீதான அபிமானமே!
ஆனால், பெரும்பான்மையான நாடுகள் தடையை ஆதரிக்கவே, இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தடைக்கு எதிராக இதுவரை முழங்கி வந்த இந்தியப் பிரதிநிதிகள், வேறு வழியில்லாமல், 'ஐந்தாண்டுகள் வரையாவது அனுமதி தாருங்கள்’ எனக் கெஞ்ச ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்தியா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுக்கு எண்டோசல்ஃபானைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார் ஜெயக்குமார்




இந்நிலையில், கடந்த 13-ம் தேதியன்று, எண்டோசல்ஃபான் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இந்தியா முழுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அத்தோடு, இந்த விஷயத்தில் இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக இருந்து வரும் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர், 'இந்திய ஜனநாயக வாலிபர் சங்க'த்தின் தேசிய இணைச் செயலாளர் டி.வி. ராஜேஷ். கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்ணனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தீர்ப்பு பற்றி அவரிடம் பேசியபோது,


மக்களுக்குக் கிடைத்த வெற்றி!
'இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. உண்மையைச் சொன்னால், நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட, இடைக்காலத் தடை செய்தி மிகமிக சந்தோஷப்பட வைத்துவிட்டது.
எண்டோசல்ஃபான் கொடூரத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும், உள்ள  மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காசர்கோடு இன்று கேரள மாநிலத்தின் வறுமைக் கோடாகவே காட்சி தருகிறது. ஆனால், இந்திய அரசு மட்டும் எண்டோசல்ஃபானுக்கு வக்காலத்து வாங்கி வருகிறது. நிரந்தரத் தடை விதிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவும் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும்' என்றார், உறுதியானக் குரலில்!
இந்நிலையில், எண்டோசல்ஃபான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு காரணமாக ஏற்படும் பாதிப்பு பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிக் கிளம்பி, அதிர வைத்தபடி இருக்கின்றன.


உண்மைகள் மறைக்கப்படுகின்றன!
இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட தி.மு.க செயலாளர் மோகன்தாஸ், ''இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்களில் தினந்தோறும் பத்தாயிரம் லிட்டருக்கும் மேல் எண்டோசல்ஃபான் தெளிக்கப்படுகிறது.
தொடர்ந்து அளவுக்கு அதிகமாக தெளிப்பதால், தொழிலாளர்களுக்கு தோல் நோய், நுரையீரல் புற்றுநோய், இதய பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தும் உள்ளனர். பெண்களுக்கு மகப்பேறு, மாதவிடாய் தொடர்பானப் பிரச்னைகள் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகமே மருத்துவ வசதி செய்து கொடுப்பதால், வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகிறது.


இளைப்பு நோயால் இறக்கும் தொழிலாளர்கள்!
கடந்த மாதம் நாரையாறு தேயிலை எஸ்டேட்டைச் சேர்ந்த தொழிலாளி ராஜனுக்கு இளைப்பு நோய் ஏற்பட்டு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சோதித்த டாக்டர்கள், 'ரத்தத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருக்கிறது, அத்துடன் நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் காப்பாற்ற முடியாது’ என கை விரித்து விட்டனர். கடைசியில் அவர் இறந்தே விட்டார். நூற்றுக்கணக்கனவர்கள் இதே முறையில் இறந்து வருகிறார்கள். இளைப்பு நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி விடுவதால், சில மாதங்களில் இறந்து விடுகிறார்கள். இவர்களது இறப்புக்கான காரணத்தை யாரும் பதிவு செய்வதில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இருந்த இடுக்கி மாவட்டத்தில், தற்போது பதிமூன்றாயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். எண்டோசல்ஃபான் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர்கள் இடுக்கி, வயநாடு, கொச்சி மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்தான். இவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தமிழர்கள்'' என்றார், வேதனையுடன்.


தமிழகமும் தப்பவில்லை!
திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியில் மருந்தடிக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருந்தடிக்கும் வேலை செய்ததால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் இளநீர் வியாபாரம், சைக்கிள் கடை என தொழில்களையே மாற்றிக் கொண்டு விட்டனர்.
நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த காந்தன், 'பல வருசமா மருந்தடிக்கிற வேலைதான் பாத்துட்டு இருந்தேன். ஆறு வருசத்துக்கு முன்ன நரம்பு தளர்ச்சி வந்தப்புறம் மருந்தடிக்கப் போறது இல்ல. காட்டம் அதிகமா இருக்கறதால எண்டோசல்ஃபானைதான் அதிகமா அடிப்பேன். அப்பப்ப பென்வால், மோனோகுரோட்டபாஸ் அடிப்பேன். கொஞ்ச நாளா அடிக்கடி உடம்பு சுகமில்லாம போனவுடனே டாக்டர போய் பாத்தப்போ, செக் பண்ணி பாத்துட்டு, 'என்ன வேலை பாக்குற’னு கேட்டாரு. மருந்தடிக்கிற வேலைனு சொன்னேன்.
'சீக்குக்கு அதுதான் காரணம், இனிமே மருந்தடிக்கப் போகக்கூடாது’னு சொல்லவும் ஆடிப் போயிட்டேன். 'உழைக்கிறதே உசுரு வாழத்தானே!'னு  அதிலிருந்து இன்னிய வரைக்கும் ஸ்பிரேயர கையால தொடவே இல்ல. இப்பவும் என்னால கஷ்டமான எந்த வேலையையும் பாக்கமுடியல... வேகமா நடக்கவும் முடியல' என்றார் சோகத்துடன்.


எண்டோசல்ஃபானை எதிர்க்கும் பூச்சிகள்!
அதே ஊரைச் சேர்ந்த ஜோசப், ''ஆரம்பத்துல ஒண்ணும் தெரியல. நாளாக, நாளாக கண் எரிச்சல் வந்துச்சு, நாலு வருசத்துக்கு முன்ன விரல்ல இருக்குற நகமெல்லாம் தன்னால பிச்சுகிட்டு விழுந்துடுச்சு, ஏகப்பட்ட காசு செலவு பண்ணித்தான் சரி செஞ்சேன். இப்பவும் திடீர் திடீர்னு காய்ச்சல் வருது. ஆஸ்பத்திரியில, 'இனிமே மருந்தடிக்கற வேலைக்குப் போக கூடாது'னு சொல்லிட்டாங்க, ஆனா, எனக்கு இதை விட்டா வேற தொழில் தெரியாதுங்க, அதனால, வேற வழியில்லாம இன்னமும் மருந்தடிக்குற வேலைதான் பாத்துகிட்டிருக்கேன்'' என்று சோகத்துடன் சொன்னவர் கூடுதல் தகவலாக
''இங்க அவரைதான் அதிகமா விதைப்பாங்க. இந்த எண்டோசல்ஃபான் மருந்தை அடிச்சப்ப ஆரம்பத்துல அவரையில இருந்த புழுங்க  செத்துகிட்டுருந்துச்சு. இப்ப பெரிய, பெரிய புழுவா கிளம்பி வருதுங்க. மருந்தடிச்சாலும் சாகமாட்டேங்கிது. அதனால, காய் பறிக்கறப்ப, அந்தப் புழுவையெல்லாம் பிடிச்சு எரிச்சுதான் கொல்றாங்க!''
தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்ட இப்பூச்சிக்கொல்லியை, இந்தியாவில் நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றன. மத்திய அரசும் இதுதொடர்பான பரிசீலனையைத் துவக்கியிருக்கிறது.
நிரந்தரத் தடைக்காக நீதிமன்றம்... போராட்டம் என்பவை தவிர்க்க இயலாமல் செய்யப்படுகின்றன. மனித நலனுக்கு எதிரான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, செலவு குறைவான இயற்கை வழி விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்... தன்னாலே வந்து விடுமே தடை!.



ஆண்டுக்கு 25 கோடி!

    எண்டோசல்ஃபான் பற்றி தமிழக வேளாண்மை துறையினரின் விளக்கம் என்ன..? மதுரை மண்டல மருந்தியல் துறை ஆய்வக அலுவலர் ரமேஷ், ''பயிர்களைத் தாக்கும் வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க எண்டோசல்ஃபான் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் ஐந்து முதல் பத்து மில்லி வரை கலக்கிறார்கள். இந்தக் கரைசல் மண்ணில் விழும்போது எளிதாகக் கரையாது. இலைகளில் படும் கரைசல், ஒரு வாரம் வரை தங்கி இருக்கும். தொடர்ந்து தெளிக்கும்போது இலைகளில் படிமமாகத் தங்கி விடும்.
இது, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லி. இதை தெளித்த இலைகளைச் சாப்பிட்டாலோ அல்லது தொடர்ந்து இதை தெளிக்கும் வேலையைச் செய்தாலோ இதில் உள்ள 'அசிட்டைல் கோலின்’ (acetylcholine)என்ற ரசாயனம்... நரம்புக் கட்டுகள், எலும்பு மஜ்ஜைகளில் தங்கி விடும். இதனால் நரம்பு தொடர்பான நோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, நுரையீரல் புற்றுநோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது'' என்றவர்,
''தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு எண்டோசல்ஃபானைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பருத்திக்கு மட்டுமே இது அதிகம் பயன்படுத்தப்படுவதால்... இங்கு பாதிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்'' என்றார்.

 முந்திக் கொண்ட தேனி!
 உச்ச நீதிமன்ற தடையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில், கடந்த 16-ம் தேதி முதல் எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி:- பசுமை விகடன்

Monday, May 30, 2011

பாப்பா பாடல்கள் - 10

அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டுப் பழம் கொண்டு வா!

பாதிப் பழம் உன்னிடம்!
மீதிப் பழம் என்னிடம்!
கூடிக் கூடி இருவரும்!
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!!

பாப்பா பாடல்கள் - 9

ஒன்று யாருக்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து

பாப்பா பாடல்கள் - 8

தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணணுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
திரும்பக் கேட்டால் பூசை!

பாப்பா பாடல்கள் - 7

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்

பாப்பா பாடல்கள் - 6

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை அடைந்தான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டுப் படுத்தான்

பாப்பா பாடல்கள் - 5

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு

பாப்பா பாடல்கள் - 3

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து