"தன் கிளையில் தன் வண்ணத்தையும்
வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
அப்பா மகன் - உறவு,
தன் காலடியில் தன் விழுதும்
தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
அமைதியின் பெருநிலையே
தாத்தா - பேரன் உறவு"
நான் விளையாடும்பொழுது வந்த வியர்வையையும் நான் விழுந்தெழும்பொழுது வந்த குருதியையும் என் அன்னை என்னை ஈன்றபொழுது வந்த உதிரத்தையும் பார்த்த பரிவு காட்டிய பாசம் நிறைந்த ஊர். என் பரம்பரை வாழ்ந்த ஊர் என்ற பாரம்பரியத்தை எனக்கு உருவாக்கி கொடுத்த ஊர். மலைகள் சூழ்ந்த ஊர் ஆனாலும் வறண்ட காலத்தில் தானும் வறண்டு போகும் குளங்கள் கொண்ட ஊர். ஜாதிகள் பல உள்ளடக்கிய ஊர். அவரவர் அடையாளங்கள் அழியாத ஊர்.
நானும் அலைந்து, திரிந்து, மனதில் தோன்றிய வார்த்தைகளை நடை மாற்றி தடம் மாற்றி கோர்த்தேன்.... யாரால் எப்பொழுது பாராட்ட படுமோ நானறியேன்.... ஆனால் அப்பொழுது என் கிறுக்கலும் கவிதை என்றாகுமோ....