Wednesday, April 6, 2011

அதிகாரிகளுக்கு ஒரு "ஓ' போடுவோம்!

 தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் எவ்வித பரபரப்புமின்றி தேர்தல் களம் உள்ளது. இதற்கு எல்லாம் மூலகாரணம் தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை தான். அரசியல் கட்சிகளின் ஆரவார பிரசாரத்தை காணோம். ஒரு சுவரொட்டியையோ, சுவர் விளம்பரத்தையோ பார்க்க முடியவில்லை. தேர்தல் நடக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு போய்க் கொண்டு இருக்கிறது.வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும்போதும், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய வரும்போது மட்டும் அந்தந்த தொகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது. ஒலிப்பெருக்கி சத்தம் இல்லை. போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் கட்சிக்காரர்களின் வாகன அணிவகுப்பு எதையும் பார்க்க முடியவில்லை.இன்னும் சொல்லப்போனால், அரசியல்வாதிகளைவிட வாக்காளர்களுக்கு மதிப்பு கூடிவருவது போல் தெரிகிறது. இப்போது அரசியல் கட்சிகளின் கவலையெல்லாம், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுவார்களா, என்பது தான். இதனால், பணம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அதற்கும், தேர்தல் கமிஷன் "செக்' வைத்துவிட்டது. பண பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதை நடத்துவதற்கு ஐகோர்ட்டே அனுமதி வழங்கி உள்ளது.ஜனநாயகம் செத்துவிடவில்லை. இன்னும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிபட்டவர்களால், எந்த அரசியல்வாதிகளும், "சகாயம்' பெற்றுவிட முடியாது என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது. இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் கமிஷனும், நமக்காக பணியாற்றக்கூடிய அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட முடியும். அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிச் சென்றவர்களைக்கூட, திரும்பிப் பார்க்க வைத்துள்ள தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போடலாம்

இந்த பதிப்பை எழுதியவர் பெயரையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
மதுமிதா மணிவண்ணன், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து.

No comments:

Post a Comment